சென்னை : பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார்.
பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா. இவர் பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சி.ஐ.டி. சகுந்தலா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூருவில் நடக்கிறது. மரணம் அடைந்த சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு செல்வி என்ற மகள் இருக்கிறார்.
சேலத்தை சேர்ந்த சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். 1960-ம் ஆண்டு ‘கைதி கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
1970-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. சங்கர் என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது முதல் சி.ஐ.டி. சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்கள் என 600-க்கும் மேற்பட்ட படங்களில் சி.ஐ.டி. சகுந்தலா நடித்துள்ளார். நடன கலைஞராக அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்தார். எம்.ஜி.ஆர்.-சிவாஜி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள அவர் 1998-ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
அதன் பிறகு டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார்.
சி.ஐ.டி. சகுந்தலா மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்