கொச்சி: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை அடுத்து மலையாள திரையுலகில் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அம்மா அமைப்பு நிர்வாகிகளின் இந்த செயல் குறித்து நடிகை பார்வதி கருத்து தெரிவித்துள்ளதோடு, இது கோழைத்தனமான செயல் என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தச் செய்தியைக் கேட்டவுடன் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது, ‘இது எவ்வளவு கோழைத்தனம்?’ என்பதுதான். ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிலையில் இருக்கும் இவர்களால் எப்படி கோழைத்தனமாக பொறுப்பில் இருந்து விலக முடியும்?
மீண்டும் இந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு பெண்களிடம் உள்ளது. பெண்கள் மட்டுமே முன் வந்து எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கேரள அரசும் அலட்சியமாக இருந்தது.
முழுச் சுமையும் பெண்கள் மீது சுமத்தப்பட்டு, அதன் விளைவுகளை அவர்கள் சுமக்க வைக்கிறார்கள். ஒருவேளை நாம் தைரியமாக முன் வந்து பெயர்களைக் கூறினால், நமக்கு நீதி கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அதன் பிறகு எங்கள் தொழில், வாழ்க்கை, நீதிமன்றச் செலவு, மனநலப் பிரச்னைகள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை” என்கிறார் பார்வதி.
என்ன நடந்தது? மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வெளியான பிறகு பல நடிகைகள் தாங்களும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி வருகின்றனர். நடிகர்கள் ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் மற்றும் பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரபல இயக்குனரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார் அளித்துள்ளார். இதனால் சினிமா அகாடமி தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னதாக ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் எழுந்ததுடன், அவரும் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரத்தில் ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் மவுனம் காப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த அமைப்பின் தலைவர் பதவியை மோகன்லாலும் ராஜினாமா செய்தார்.
அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். மலையாள நடிகர் சங்கத்தில் இந்த ‘கூண்டு’ ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.