புதுச்சேரி: புதுச்சேரி அரசின் தகவல் மற்றும் விளம்பரத் துறை மற்றும் அலையன்ஸ் பிரான்ஸ் இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா அக்டோபர் 4 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறுகிறது.
சிறந்த படமாக சங்கரதாஸ் சுவாமி விருதுக்கு ‘குரங்கு பெடல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 4-ம் தேதி அலையன்ஸ் பிரான்சைஸ் திரையரங்கில் நடைபெறும் விழாவை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து, 2022-ம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான சங்கரதாஸ் சுவாமி விருதை ‘குரங்கு பெடல்’ படத்தின் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு வழங்குகிறார்.
‘குரங்கு பெடல்’ படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன் சிறப்புரையாற்றுகிறார். விழா முடிவில் ‘குரங்கு பெடல்’ திரைப்படம் திரையிடப்படுகிறது.
5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒரு பிராந்திய மொழி திரைப்படம் திரையிடப்படுகிறது. சனிக்கிழமை 5-ம் தேதி ‘ஆர்ஆர்ஆர்’ (தெலுங்கு), 6-வது ‘அரியிப்பு’ (மலையாளம்), 7-வது ‘டானிக்’ (வங்கம்), 8-வது ‘மேஜர்’ (இந்தி) ஆகிய படங்கள் திரையிடப்படும்.