சென்னை: ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ஒரு மாதமாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்ததாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இதற்கான பூஜை இன்று நடைபெற்றது. இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

வழக்கமாக தனது பட பூஜைகள், புரமோஷன்கள், ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா, இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் இணைந்து 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படம் பற்றி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதாவது:-
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக பிரமாண்ட பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். நிச்சயம் படம் இதை விட பெரியதாக இருக்கும். இந்த வெளியீட்டை இந்தியா முழுவதும் பெரிதாக்க முயற்சிக்கிறோம். நயன்தாராவைக் குறிப்பிட வேண்டும். இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதமாக விரதம் இருந்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாகத்துக்காகவும் உண்ணாவிரதம் இருந்தார். இந்தப் படத்துக்காகவும் உண்ணாவிரதம் இருக்கிறார். அவங்க மட்டுமில்லாம, அவங்க குடும்பத்துல எல்லாரும், குழந்தைகள் உட்பட எல்லாரும் விரதம் இருக்காங்க” என்றார் ஐசரி கணேஷ். துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.