சென்னை: தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் இவருக்கான விழா எடுக்க வேண்டும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன், இசைஞானி இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி.. ஸ்ரீராம். இவர் படத்தில் இவரது ஒளிப்பதிவில்தான் நாம் அதுவரை பார்த்த சாதாரண வீடு கூட அழகாகத் தெரிந்தது. வீடு இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவரது ‘மௌன ராகம் ‘படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
ஒரு காட்டன் புடவையைக் கூட அழகாகக் காட்ட முடியுமா என்று நான் வியந்தேன். ‘திருடா திருடா ‘படத்தின் ‘தீ தீதித்திக்கும் தீ’ பாடலில் நாம் இதுவரை பார்த்த எழும்பூர் மியூசியத்தைக் கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார். கமலா தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன்.அந்தப் பாடலில் விளக்குகள் அணைந்து எரியும்போது அந்த அவரது ஒளி ஜாலத்தைப் பார்த்து திரையரங்க ரசிகர்கள் கைதட்டினார்கள். மீண்டும் பார்த்தபோது அதே காட்சியில் கைதட்டினார்கள்.
வசனங்கள், நடிப்பு எல்லாவற்றையும் கடந்து ஒளிப்பதிவுக்குக் கைத்தட்டல் பெற்றவர் இந்த ஒளிப்பதிவு மேதை. அப்படி தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பு சேர்த்தவர் இங்கே வந்திருக்கிறார். இன்று இந்தியாவின் தலைசிறந்து விளங்கும் பல ஒளிப்பதிவாளர்கள் அவர் மூலம் வந்தவர்கள் .
‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’, ‘சீனி கம் ‘ வரை அவர் தனது மேதைமையான ஒளிப்பதிவைக் காட்டியவர்.பெரிய மாயாஜாலம் நிகழ்த்தியவர். இவர் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் இவருக்கான விழா எடுக்க வேண்டும் என்றும் இந்த மேதை கொண்டாடப்பட வேண்டும் என்றும் இதன் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.