ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் வழக்கால் மனமுடைந்து சினிமாவில் இருந்து விலக நினைப்பதாக ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குனர் சுகுமார் தெரிவித்துள்ளார். ‘புஷ்பா 2’ படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியானது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சிக்காக வந்தார்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் புஷ்பா 2 இயக்குனர் சுகுமாரும் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில், ஒரு திரைப்பட நிகழ்ச்சியில், தொகுப்பாளர் சுகுமாரிடம், “என்ன விட்டுவிட நினைக்கிறீர்கள்?” உடனே சுகுமார், “சினிமா” என்று பதிலளித்தார்.
இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபற்றி சுகுமாரிடம் கேட்டபோது, ”தியேட்டரில் ரேவதி என்ற பெண் இறந்தது எனக்கும் அல்லு அர்ஜுனுக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால்தான் சினிமாவை விட்டு விலக நினைக்கிறேன்” என்றார்.