சூர்யா, த்ரிஷா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்தனர். படம் பொங்கலுக்கு ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்களுடன் போட்டியாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தீபாவளி ட்ரீட்டாக சிங்கிள் பாடலை மட்டும் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள பாடல் ப்ரோமோ நேற்று வெளியானபோது, சிலர் அந்த இசை ஏ.ஆர். ரஹ்மான் கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப் படத்தின் “ஜிங்குச்சா” பாடலைப் போல் உள்ளது என ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதனால் சமூக வலைத்தளங்களில் “அபயங்கர் சுட்டாரா?” என்ற கேள்வி வேகமாக பரவி வருகிறது. அதே சமயம் சிலர், பாடல் முழுமையாக வெளியாகும் வரை தீர்ப்பு கூற வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.
சாய் அபயங்கர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பல்டி, டியூட் படங்கள் வெற்றி பெற்றதால், கருப்பு படத்திற்கும் அவரின் இசை மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், பாடல்களில் வரிகள் தெளிவாக கேட்கவில்லை, இசை ஒரே மாதிரியாக இருப்பதாக சில ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு பதிலாக படக்குழு பாடல் வரிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், பாடல் முழுமையாக இன்று மாலை வெளியாகும். பாடலைக் கேட்டபின் அனைவரும் விமர்சனங்களைக் கடந்து அதை விரும்புவார்கள் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது. சூர்யா தீபாவளிக்கு ரசிகர்களுக்கு வழங்கும் இந்த “கருப்பு” பாடல் திரையரங்குக்கு முன்பே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.