சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டதால், கடந்த மாதம் 30-ம் தேதி இரவு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதயத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பெருநாடியில் ஏற்பட்ட வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி ஸ்டென்ட் கருவி மூலம் சரி செய்தனர்.
இதையடுத்து, அவர் தனியார் வார்டுக்கு மாற்றப்பட்டார். 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ரஜினிகாந்த் வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவமனையில் இருந்த நான் விரைவில் குணமடைய வாழ்த்திய எனது அரசியல் நண்பர்கள், திரையுலகினர், நண்பர்கள், நலம் விரும்பிகள், பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
என் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்த, என்னை அளவற்ற அன்பு செலுத்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலருக்கும் ரஜினிகாந்த் எக்ஸ் இணையதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.