ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் உள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த மாதம் 5-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முன்னதாக இப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சியை காண சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் தேஜ் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த ரேவதியின் குடும்பத்துக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ரேவதி மரணம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் பிக்கட்பல்லி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் நடிகர் அல்லு அர்ஜுன் பிக்கட்பல்லி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்பான வழக்கு ஹைதராபாத் 2-வது கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. புஷ்பா 2 சிறப்புத் திரையிடலில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.