சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் அதிகாலை காட்சி கேரளாவில் தொடங்கியது. நள்ளிரவு முதல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் 68-வது படம். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று (செப்டம்பர் 05) திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் ‘தி கோட்’ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. 2022-ல், அஜித்தின் ‘வலிமை’ படத்தின் போது இளைஞர் ஒருவர் இறந்த பிறகு, அதிகாலையில் எந்தப் படத்தையும் திரையிட அனுமதிக்கப்படவில்லை.
இதனால் தமிழகத்தில் 9 மணிக்கு ‘தி கோட்’ படம் திரையிடப்படுகிறது. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய அருகிலுள்ள மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது.
முதல் காட்சி கேரளாவில் 4 மணிக்கும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 6 மணிக்கும் தொடங்குகிறது. இதனால் தமிழகத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் பலர் நேற்று இரவு ‘தி கோட்’ படத்தை பார்க்க அண்டை மாநிலங்களுக்கு சென்றனர்.
மேலும் நள்ளிரவில் இருந்தே தியேட்டர் வளாகத்தில் பிரமாண்ட பேனர்களை வைத்தும், பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.