சென்னை: எனக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு காரணம் நடிகர் சரவணன்தான் என்று அவர் மீது முதல் மனைவி பகீர் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்.
‘வைதேகி வந்தாச்சு’, ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சரவணன். இதன்பின் ‘நந்தா’ மற்றும் ‘பருத்திவீரன்’ படத்தில் கார்த்திக்குக்கு சித்தப்பாவாக நடித்து பிரபலமானார். கடந்த 2003-ம் ஆண்டில் சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2015-ம் ஆண்டு முதல் ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் இருந்த சரவணன் 2019-ம் ஆண்டு முதல் மனைவியான சூர்ய ஸ்ரீயின் சம்மதத்துடன் ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார்.
முதல் மனைவி, இரண்டாவது மனைவி என இருவரையும் மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எதிர்எதிர் வீடுகளில் குடிவைத்தார். ஏற்கனவே வீடு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையில் முதல் மனைவியுடன் மோதல் போக்கை கடைபிடித்த சரவணன், பின்னர் சமரசம் செய்து கொண்டார். இதனால் அவர் மீதான புகார்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில், முதல் மனைவி சூர்ய ஸ்ரீ தனது கணவர் சரவணன் மீது ஆவடி காவல் ஆணையரக அலுவலத்தில் புகார் அளித்துள்ளார். அம்மனுவில், சரவணன், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு என் வீட்டிற்கு எதிரிலேயே குடி வைத்து இருக்கிறார். இதனால் தினமும் சண்டை, தகராறு வந்து கொண்டே இருக்கிறது.
என் வீட்டு கதவு திறந்து இருந்தாலே, கதவை எட்டி உடைத்து, இந்த வீடு என்னுடையது என சொந்தம் கொண்டாடுகிறாள். 18-ந்தேதி செருப்பு ஸ்டாண்டில் பிரச்சனை ஆரம்பித்தது. அந்த செருப்பு ஸ்டாண்டை அடித்து உடைத்து போட்டுவிட்டாள். நானும் என் கணவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை, என்னுடைய வீட்டுக்குள் புகுந்து, அந்த போட்டோவை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்று அந்தப் பெண் எடுத்து சென்றுவிட்டாள்.
இப்படி தினம் தினம் அந்த பெண்ணால் எனக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. என்னுடைய செலவுக்கு சரவணன் எந்தவிதமான பணத்தையும் தருவதில்லை. விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் அவர் ஒரு முறை கூட அதற்கு ஆஜராகவில்லை.
சரவணன் எனக்கு ஜீவனாம்சம் தரவேண்டும், அவரால், மாதா மாதம் பணத்தை கொடுக்க முடியாது என்பதால், ஒரே செட்டில்மெண்டாக அவர் பணத்தை தர வேண்டும். இப்போது சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன். அப்பா, அண்ணன் தான் என்னை பார்த்துக் கொள்கிறார்கள். எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு காரணம் சரவணணும், அவருடைய இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியும் தான். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.