சென்னை: விஜய் கட்சியில் சேர போகிறார் என்ற தகவலுக்கு எந்த கட்சியிலும் நாட்டமில்லை என்று நடிகை திரிஷா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகை திரிஷா விஜய் கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக திரிஷாவின் அம்மா விளக்கம் அளித்துள்ளார். அஜித் நடிப்பில் ‘விடா முயற்சி’ படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்துள்ளார். அடுத்து அஜித்துடன் குட் பேட் அக்லி படத்திலும் நடித்திருக்கிறார். மோகன்லாலுடன் ராம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, திரிஷா அரசியல் பிரவேசம் செய்யப்போவதாகவும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அவர் சேரப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இது குறித்து திரிஷாவின் அம்மா உமாவிடம் கேட்டபோது, ‘‘திரிஷா நடிப்புக்கு முழுக்கு போடுவதாக சொல்வதில் உண்மையில்லை. அவருக்கு எந்த கட்சியிலும் நாட்டமில்லை. அரசியலிலும் ஈடுபட மாட்டார். இது எல்லாமே வதந்திதான்’’ என தெரிவித்துள்ளார்.