திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அலங்காரப் பொருட்கள், நாப்கின் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நயன்தாரா- விக்னேஷ் தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கி உள்ளனர். சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை ஸ்டுடியோவாக மறுகட்டமைபு செய்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரும் வியக்க வைத்தது.
இதனிடையே, நயன்தாரா தற்போது ‘டெஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘எல்ஐகே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படி நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் இந்த நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் தொடர்பான வீடியோவையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற கோ பூஜையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து வழிபாடு செய்தார். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். இதன்பின் கோவிலின் கலைநயத்தை புகைப்படம் எடுத்துக்கொண்ட விக்னேஷ் சிவன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.