சென்னை: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், நிவாரணப் பணிகளுக்காக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிவாரண உதவியை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
அந்த வகையில் தற்போது நடிகர்கள், சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை நிவராண நிதியாக கேரளாவுக்கு வழங்கியுள்ளனர். முன்னதாக நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வயநாடு துயரச்சம்பவம் குறித்து இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதயம் நொறுங்குகிறது. மீட்பு நடவடிக்கைகளில் குடும்பங்களுக்கு உதவி செய்யும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் மற்றும் களத்தில் உள்ள மக்களுக்கும் என்னுடைய வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.