சென்னை: திரைப்பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் சமீபத்தில் இயக்குநராக அறிமுகமான பிரமாண்ட படம், ‘பயர்’. தமிழகத்தில் நடந்த பரபரப்பான சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் குறித்து ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறியதாவது:- பயர் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன. வழிபாடு, கோபம் மற்றும் காமம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் நெருப்பு உள்ளது. இந்த அனைத்து கூறுகளும் இணைந்த கதை கொண்ட படமாக ‘பயர்’ உருவாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்த ஒரு பரபரப்பான உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்காக சில மாற்றங்களைச் செய்துள்ளோம். நாகர்கோவில் காசியின் கதையா இது என்று எல்லோரும் கேட்கிறார்கள். நாகர்கோவில் காசி மக்களுக்கு தெரியும். மக்களுக்குத் தெரியாமல் நூற்றுக்கணக்கான காசிகள் முகமூடி அணிந்து திரிகின்றனர். அப்படித் திரியும் காசியைப் பற்றிய கதை இது.
இதில் ரசிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் 4 பெண்களின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. 4 ஹீரோயின்கள் இருந்தாலும் எல்லோருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். தியேட்டரில் பார்த்தவுடன் பெண்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படும். பெண்களின் உரிமைகள் இன்னும் முழுமையாக அடையப்படவில்லை.
பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளோம். பொதுமக்களுக்கான சிறப்புக் காட்சியாக முன்கூட்டியே படத்தைத் திரையிட்டோம். பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்பதால் பெண் ஆட்டோ டிரைவர்கள், சாப்ட்வேர் தொழிலாளிகள், துப்புரவு தொழிலாளர்கள் என 130 பேர் பார்த்தனர். அப்போது படத்தின் கதையை வெளிப்படையாகப் பாராட்டினார்கள். இப்படம் வரும் 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.