மும்பை: எனக்கு இவ்வளவு அன்பை அள்ளித் தரும் நீங்கள் யார் சாமி என்று ரசிகர்களை பார்த்து நெகிழ்ந்து போய் கேட்டுள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யாவின் ‘ரெட்ரோ’ மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக விருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காகப் பல்வேறு பகுதிகளுக்கும் படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். அந்த வகையில் ‘ரெட்ரோ’ குழுவினர் மும்பை சென்றிருக்கிறார்கள்.
அங்கு சூர்யா பேசுகையில், “ஒவ்வொரு நேரத்திலும் சினிமா துறையில் புதிய விஷயத்தை மாற்றி அமைப்பவர்கள் தேவைப்படுவார்கள். எவராவது வந்து வித்தியாசத்தைக் காட்சிப்படுத்தி விடுவார்கள். அப்படிக் கார்த்திக் சுப்புராஜ் புதிய விஷயத்தை மாற்றியமைத்திருக்கிறார்.
திரைக்கதை, விஷுவல்கள் என அனைத்திலும் வேறுபாட்டைக் காட்டியிருப்பார். அவருடைய கதாபாத்திரம் அவர் எழுதிய ஒரு வகையிலான பாணியில் தான் நடந்து கொள்ளும்.
அவர் எப்படியான படங்கள் செய்தாலும், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை உங்களால் கணிக்கவே முடியாது. காட்சி முடிவானதும் படப்பிடிப்பு தயார் செய்வோம்.
அந்த சமயத்தில் ஒரு புதிய கோணத்தின் மூலம் ஆச்சரியத்தைக் கொடுத்து நடிகர்களால் இதைச் செய்ய முடியுமா எனச் சவால் விடுவார். அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றவர், “நான் என்னுடைய பள்ளிக் கல்லூரி நாட்களில் பல அனுபவங்களைக் கற்றுக் கொண்டேன்.
லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்தேன். அங்கிருந்துதான் ஸ்க்ராட்சில் இருந்து தொடங்கியது. நான் இங்குப் பெரும்பாலும் வந்தது கிடையாது. ஆனாலும், எனக்காக இப்படியான அன்புக் கொடுக்கிறீர்கள். யாரு சாமி நீங்களெல்லாம்!” என உற்சாகத்துடன் பேசினார்.