
வெள்ளை அரிசிக்கு மாற்றாக, பழுப்பு அரிசி நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்தது என்பதாலேயே அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. முழு தானியமாகும் பழுப்பு அரிசியில் உள்ள ஊட்டச்சத்துகள் இதனை ஆரோக்கிய உணவாக மாற்றுகின்றன. ஆனால் பலர் இத்தகைய அரிசியில் மறைந்திருக்கும் ஆபத்துகளைப் பற்றிய தகவல்களையே அறியாமல் இருக்கிறார்கள். சமீபத்திய ஒரு ஆராய்ச்சியின் படி, பழுப்பு அரிசியில் நச்சு உலோகமான ஆர்சனிக் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறிப்பாக மூளை வளர்ச்சியில் உள்ள இளம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பழுப்பு அரிசியில் வெள்ளை அரிசியைவிட சுமார் 15 சதவீதம் அதிக ஆர்சனிக் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆர்சனிக் என்பது புற்றுநோய் மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுடன் தொடர்புடைய ஒரு நச்சு உலோகம். பெரியவர்களுக்கு இது உடனடியாக அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், ஆறு மாதங்கள் முதல் இருபத்து நான்கு மாதங்கள் வரை உள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பழுப்பு அரிசியை உணவில் அதிகம் உட்கொள்கின்ற குழந்தைகளுக்கு, வெள்ளை அரிசி சாப்பிடும் குழந்தைகளைவிட இருமடங்கு அதிகமாக ஆர்சனிக் சேரும் எனவும், இது அவர்களின் அறிவுத்திறன் மற்றும் கற்றல் திறனைத் தாக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து நச்சுப் பொருள்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நடத்தை சிக்கல்கள், கவனம் குறைபாடு, கற்றல் சிரமங்கள், ஆட்டிசம் மற்றும் ADHD போன்ற சிக்கல்களுக்கு வாய்ப்பு அதிகம்.
இதைவிட மிக முக்கியமானது, ஆர்சனிக்கின் நீண்டகால தாக்கங்கள் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. புற்றுநோய் ஆராய்ச்சி மையமான IARC, ஆர்சனிக் மற்றும் கனிம ஆர்சனிக் சேர்மங்களை மனிதர்களுக்கு நிச்சயமாக புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை என வகைப்படுத்தியுள்ளது. இது நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோலில் புற்றுநோய் உண்டாகும் அபாயத்தை தூண்டக்கூடியதாகும்.
வெள்ளை அரிசியைவிட பழுப்பு அரிசியில் அதிகமாக ஆர்சனிக் இருப்பதற்கான காரணம், பழுப்பு அரிசியில் தானியத்தின் வெளிப்புறப் பகுதி அகற்றப்படாமல் இருப்பதுதான். அந்தப் பகுதியில்தான் அதிக அளவில் ஆர்சனிக் தங்கியிருக்கும். வெள்ளை அரிசியில் தவிடு அகற்றப்படுவதால், அதன் மூலம் ஆர்சனிக் அளவு குறைந்திருக்கிறது. ஆர்சனிக் இரண்டு வடிவங்களில் உள்ளது – கனிமம் மற்றும் கரிமம். இதில் கனிம ஆர்சனிக் தான் மிகவும் தீங்கு விளைவிக்கும் தன்மையுடையது.
ஆராய்ச்சியின்படி, பழுப்பு அரிசி சாப்பிடும் ஒரு குழந்தை ஒவ்வொரு நாளும் தனது உடல் எடைக்கேற்ப ஒரு கிலோகிராமுக்கு 0.29 முதல் 0.59 மைக்ரோகிராம் வரை ஆர்சனிக் உட்கொள்ளக்கூடும். இது பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பான அளவான 0.21 மைக்ரோகிராம்களைவிட அதிகமாகும் என்பதே கவலைக்குரிய உண்மை.