தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 1
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 4 பல்
குழம்பிற்கு…
புளி – எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
சுண்டக்காய் வத்தல் – 50 கிராம்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – சிறிய துண்டு
வறுத்த கருப்பு எள்ளு பொடி- 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் அதில் பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். பிறகு அதில் தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர்ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு எலுமிச்சை அளவு புளியை 2 கப் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டக்காய் வத்தலை சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் சின் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் அடுப்பை குறைவான தீயில் வைத்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் சுண்டும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்கு கொதித்து சுண்டியதும், அதில் வெல்லத் துண்டை சேர்த்து, அத்துடன் வறுத்த சுண்டக்காய் வத்தலை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக அதில் வறுத்து பொடித்த கருப்பு எள்ளு பொடியை தூவி கிளறி, 1 கொதிவிட்டு இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு வத்தக்குழம்பு தயார்.