சென்னை: சுவையான கார கோதுமை ரொட்டி செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2 கோப்பை
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி – 1தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.
ரொட்டிக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளைச் சுற்றிச் சிறிது எண்ணெய் தடவவும். ஒவ்வொரு உருண்டையாக எடுத்து நெகிழிப் பைக்குள் (plastic cover) வைத்து ரொட்டி தட்டவும்.
அடுப்பில் தோசைக்கல், அல்லது சப்பாத்தி செய்யும் பாத்திரத்தை வைத்து, ரொட்டி சுட்டு எடுக்கவும். எண்ணெய் தேவையான அளவு ஊற்றி, இரண்டு பக்கமும் புரட்டி எடுக்க, ரொட்டி நன்கு சிவந்து வரும். இப்போது சூப்பரான கார கோதுமை ரொட்டி ரெடி.