சென்னை: அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ரச மலாயும் ஒன்று. உங்கள் வீட்டிலேயே எளிய முறையில் ரச மலாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் – 1.5 லிட்டர்
எலுமிச்சை சாறு – 2 1/2 tsp
ரவை – 1 tsp
தண்ணீர் – 1 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
பாதாம் பால் செய்ய
பால் – 1.5 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் பொடி – 1 tsp
குங்குமப் பூ – ஒரு சிட்டிகை
பிஸ்தா – சிறிதளவு
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பால் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறினால் பால் திரிந்து வரும். பால் நன்குத் திரிந்ததும் அடுப்பை அனைத்து ஒரு பவுலின் மேல் பருத்தித் துணியை விரித்து அதில் திரிந்த பாலை ஊற்ற வேண்டும். பின் அதிலிருக்கும் பால் இறங்கும் அளவு இறுக்கி திரிந்த பால் கட்டியை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் ரவை சேர்த்து மாவு போல் தண்ணீர் இல்லாமல் பிசைந்துகொள்ள வேண்டும். அதைத் தட்டை வடிவில் தட்டி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது 1 லிட்டர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். சர்க்கரை முற்றிலும் கரைந்ததும் தட்டி வைத்துள்ள திரிந்த பால் கட்டிகளை சேர்த்து 8 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.
கொதித்ததும், திரிந்த பால் கட்டிகளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து சர்க்கரை, குங்குமப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாகும் வரைக் கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்து இறுகியதும் ஆற விடவும் அதில் வெப்பம் தனிந்ததும், தனியாக வைத்துள்ள திரிந்த பால் கட்டிகளைச்சேர்க்க வேண்டும்.
அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்ச்சியானதும் வெளியே எடுத்து பிஸ்தாவை உடைத்து அதன் மேல் தூவி பரிமாறலாம். சுவையான ரச மலாய் தயார்.