சென்னை: கேழ்வரகில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
அந்த வகையில் கேழ்வரகு அல்வா மிக்க சுவையான பல சிறப்பு அம்சம் கொண்ட அல்வா அதிக நெய் இல்லாமல் தேங்காய்ப்பாலின் சுவையும் மனமும் கலந்த ஒரு இனிப்பு வகை. வெல்லம் சேர்த்து செய்வதால் இன்னும் இரும்புச்சத்து அதிகமாக கொண்டது.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு-1 கோப்பை
தேங்காய் பால் -1 கோப்பை கெட்டியாக
தண்ணீர்-2 கோப்பை (இரண்டு பால் ஒரு பங்கு தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்)
வெல்லம்-1 1/4 கோப்பை
நெய்-2 மேஜைக்கரண்டி
முந்திரி- 10
செய்முறை: கேழ்வரகு மாவை 1 மணி நேரம் இரண்டு கோப்பை தண்ணீரில் ஊறவைத்து, மெல்லிய துணியால் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். (ராகி பால்) வாணலியில் 1 மேஜை கரண்டி நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
கெட்டியான தேங்காய் பால் மற்றும் கேழ்வரகு மாவை ஒன்றாக கலந்து அதே வாணலில் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். தீ மிதமானதாக வைத்து கை விடாமல் கிளறவும். நல்ல கெட்டியாக வரும் சமயம் வெல்லம் சேர்த்து கிளறவும். (வெல்லம் 1/4 கோப்பை நீரில் அடுப்பில் வைத்து கரைத்தும் சேர்க்கலாம்).
இடையில் நெய் சேர்த்து நன்கு கிளறவும் 10 நிமிடம் வரை அப்படியே கிளறவும், கண்ணாடி போல் நன்கு அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, வறுத்த முந்திரிபருப்பு தூவி பரிமாறவும். தேங்காய் பாலோடு சேர்த்து கிண்டுவதால் நல்ல தேங்காய் பால் மனம் அசத்தலாக இருக்கும் நெய்யும் குறைவாகவே சேர்க்கலாம்.