சென்னை: வாசனைக்காகவும், சட்னியும் மட்டும்தான் செய்ய முடியும் என்று நினைத்திருப்பீர் கொத்தமல்லியை பார்த்து. ஆனால் சூப்பராக சாப்பாடு செய்யலாம். ஆமாங்க… உடலுக்கு தெம்பை தரும் கொத்தமல்லி சாப்பாடு செய்வது எப்படி என்று பார்ப்போமா!
பாசுமதி அரிசி – 2 கப், கொத்தமல்லி கட்டு – 1 கட்டு, இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – 1, பட்டை, லவங்கம் – 1, ஏலக்காய் – 1, முந்திரி, உப்பு, நெய் – தேவைக்கு தகுந்தது போல் எடுத்துக் கொள்ளவும்.
எப்படி செய்வது?
கொத்தமல்லியை தண்ணீர் விட்டு நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கி அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நெய்விட்டு காய்ந்ததும் பட்டை லவங்கம், ஏலக்காய் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் வெங்காயத்தை, இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை நன்கு வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடவும்.
தண்ணீர் கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும். சூப்பர் சுவையான கொத்தமல்லி சாப்பாடு தயார்… வாசனை பத்து வீடுகளுக்கு பரவும். ஹெல்தியான உணவு.