கொழும்பு: அரச ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக கொழும்பில் தொழிற்சங்கங்கள் களமிறங்குகின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூறு தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (19) கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரிக்கவும், தொழிற்சங்கங்களை நசுக்கும் வேலைத்திட்டத்தை நிறுத்தவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி, உரிய கோரிக்கைகளை வழங்குவதற்கு பதிலாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அதற்கான முயற்சிகள் தற்போது மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு சில அரச ஊழியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் வழங்கவும் சம்பளத்தை உயர்த்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏனைய அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அதன் படி, குறித்த கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், முதல் நடவடிக்கையாக நூறு அரச மற்றும் அரை அரசாங்க தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் கண்டனப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.