இலங்கை: இறுதி கிரியைகள் தொடங்கின… தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் இறுதி கிரியைகள் ஆரம்பமாகியுள்ளன.
திருகோணமலையில் அமைந்துள்ள இந்து மயானத்தில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது. இறுதி அஞ்சலியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், அன்னாரின் இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதுடன், பெருந்திரளான மக்களும் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் திருகோணமலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உடல் நலக்குறைவு காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தன் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த 30 ஆம் திகதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.