சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஸ்மித் மற்றும் கோஹ்லியின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.
இருவரும் ‘Fab Four’ வீரர்கள் பட்டியலில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
“எங்கள் இருவருக்கும் நல்ல பந்தம் இருக்கிறது. நாங்கள் அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்புவோம், பேசுவோம். கோஹ்லி ஒரு சிறந்த மனிதர் மற்றும் அபார திறமை கொண்ட வீரர்.
இந்த கோடை தொடரில் அவருக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலி சிந்தனையிலும் செயலிலும் ஆஸ்திரேலியர். இதை ஏன் சொல்கிறேன் என்றால், விளையாட்டின் சவாலான தருணத்திலும் அவர் அபாரமாக விளையாடி எதிரணிக்கு சவால் விடுகிறார்.
அதனால்தான் நான் அவரை இந்திய அணியில் ஆஸ்திரேலிய பாணி வீரர் என்று அழைக்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாக நான் அவருடன் போட்டியிட நினைத்ததில்லை. களத்தில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு உதவ வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார் ஸ்மித்.
ஆஸ்திரேலிய அணிக்காக 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 9685 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 32 சதங்கள் மற்றும் 41 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 8848 ரன்கள் எடுத்துள்ளார்.
29 சதங்களும் 30 அரைசதங்களும் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 1352 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அங்கு 6 சதங்களையும் 4 அரைசதங்களையும் பதிவு செய்துள்ளார்.