துபாய்: 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். அதன்படி நாளை துபாயில் நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஐசிசி தொடரில் மட்டுமே மோதும் என்பதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, நாளையும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
ஆனால் வங்கதேசத்துக்கு எதிராக போராடிய பிறகே அவர்களால் வெற்றி பெற முடிந்தது. சுப்மன் கில் பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளார். கடந்த 4 போட்டிகளில் 2 சதம், 2 அரைசதம் அடித்து சூப்பர் பார்மில் உள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை எட்டுவதற்கு விராட் கோலிக்கு இன்னும் 15 ரன்கள் தேவை. ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜடேஜா ஆகியோர் இருப்பது பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்துகிறது.
வங்கதேசத்துக்கு எதிராக ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஹர்ஷித் ராணாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். வங்கதேசத்துக்கு எதிராக ஒரு விக்கெட் கூட எடுக்காத குல்தீப் யாதவுக்குப் பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு நாளை வாய்ப்பு கிடைக்கலாம். மறுபுறம் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் மோசமாக தோற்றதுடன், இந்தப் போட்டியிலும் தோற்றால் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.
இதனால், வாழ்வா சாவா என்ற நெருக்கடியில் களம் இறங்கியுள்ளது. ஃபகார் ஜமான் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளார். பாபர் அசாம், சல்மான் ஆகா, குஷ்டில் ஷா ஆகியோர் ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஷாஹீன் ஷா அப்ரிடி, நதீம் ஷா, ஹரிஸ் ரவுப் ஆகியோர் வேகத்தில் மிரட்டினாலும் ரன்களை விட்டுக்கொடுத்து வருகின்றனர். தரமான ஸ்பின்னர் இல்லாததும் ஒரு குறை. பீல்டிங்கும் மிகவும் மோசமாக உள்ளது. வலிமையான இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமானால், அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
போட்டி நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நாங்கள் எந்த அழுத்தத்திலும் இல்லை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ் ரவுப் கூறுகையில், நாங்கள் எந்த அழுத்தத்திலும் இல்லை. அனைவரும் நிம்மதியாக உள்ளனர். மற்ற போட்டிகளைப் போலவே இந்தியாவையும் எதிர்கொள்வோம். அனைத்து வீரர்களும் நேர்மறையானவர்கள். எங்களின் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்துவோம். துபாயில் நடந்த டி20 போட்டியில் ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவை தோற்கடித்துள்ளோம். நாங்களும் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம். அனைத்து வீரர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். எனவே இந்த போட்டி சிறப்பாக இருக்கும். துபாயில் பாகிஸ்தான் நல்ல சாதனை படைத்துள்ளது.