திம்பு: பூடானில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடக்க போட்டியில், இந்திய அணி கோல் மழையை பொழிந்து நேபாளத்தை 7-0 என வீழ்த்தியது.
நேற்றைய ஆட்டத்தில் 16வது நிமிடத்தில் அப்ஹிஸ்தா இந்திய அணிக்கு முதல் கோலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து 25வது நிமிடத்தில் நிரா சானு, 33வது நிமிடத்தில் அனுஷ்கா தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். 41வது நிமிடத்தில் அப்ஹிஸ்தா தனது இரண்டாவது கோலை அடித்தார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் ஜுலன் (45+1) கோல் அடித்து, இந்தியா 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் நிரா (56), அனுஷ்கா (62) தலா ஒரு கோல் சேர்த்தனர். இதன் மூலம் இந்தியா 7-0 என்ற மிகப்பெரிய வெற்றியை கைப்பற்றியது.
இந்திய அணி நாளை வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த தொடரில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய 4 அணிகள் தலா இரண்டு முறை மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி கோப்பை வெல்லும்.