பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய எட்டு அணிகள் பங்கேற்ற ஒன்பதாவது ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின்பு ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்திய வீரரான சுப்மன் கில் முதலிடத்தையும், ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தையும், விராட் கோலி ஐந்தாவது இடத்தையும், ஷ்ரேயாஸ் ஐயர் எட்டாவது இடத்தையும் பிடித்திருந்தனர். இந்த பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த 4 வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
மேலும், ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியானது. இதில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷனா தொடர்ந்து முதலிடத்தில் நிற்கிறார். நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் 6 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியில் இருந்து, அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா பத்தாவது இடத்தையும், சாம்பியன் டிராபி தொடரில் 5 போட்டிகளில் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குல்தீப் யாதவ், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான ரச்சின் ரவிந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை ஆரம்பத்தில் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இது அவரது முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த சாதனைகள் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி, இந்திய கிரிக்கெட் அணியின் அசாத்திய திறமையை மீண்டும் உணர்த்தியுள்ளன.