அமெரிக்காவில் நடைபெற்ற மகளிர் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் அவர் இந்தோனேசியாவின் ஐரீன் சுகந்தாவை தோற்கடித்து 11க்கு 8.5 புள்ளிகள் பெற்று தனது இடத்தை உறுதி செய்தார்.
இந்த சாதனை மற்றும் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். சர்வதேச செஸ் உலகின் பிரபல வீரர்களான ஜூடித் போல்கர், சூசன் போல்கர், விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பலர் கோனேரு ஹம்பிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் கோனேரு ஹம்பி, அவருக்கு வயது 37. செஸ் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். 2012ல் மாஸ்கோவில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2019ல் ஜார்ஜியாவில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போது, உலக மகளிர் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம், செஸ் உலகின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றை கொனேரு ஹம்பி அடைந்துள்ளார்.