சென்னை: ஹங்கேரியின் புடாபெஸ்டில் சமீபத்தில் நடந்து முடிந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்திய ஆடவர் அணியில் சென்னையைச் சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தாவும், பெண்கள் அணியில் வைஷாலியும் இடம் பெற்றனர். ஆடவர் அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணனும், பெண்கள் அணிக்கு அர்ஜுன் கல்யாண் பயிற்சியாளராகவும் இருந்தனர்.
இதில், மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் டி.குகேஷ், வேலம்மாள் பள்ளியில் பிரக்ஞானந்த முகப்பேர் படித்து வருகின்றனர். மற்ற 3 பேரும் வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.
இந்நிலையில் அவர்கள் 5 பேருக்கும் நேற்று சென்னை நொளம்பூரில் உள்ள வேலம்மாள் ஹாலில் வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சமும், ஸ்ரீநாத் நாராயணன், அர்ஜூன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.40 லட்சம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இதனை வேலம்மாள் பள்ளி முதல்வர் எம்.வி.எம்.வேல் மோகன், துணை முதல்வர் ஸ்ரீராம் ஆகியோர் வழங்கினர். விழாவில் குகேஷின் தாய் பத்மா, பிரக்ஞானந்தா, வைஷாலியின் பெற்றோர் ரமேஷ்-நாகலட்சுமி, அர்ஜுன் கல்யாணின் பெற்றோர் சரவண பிரகாஷ்-வினு ஸ்ரீநாத் நாராயணனின் பெற்றோர் நாராயணன்-பிரசன்னா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
விழா மேடையில் வீரர்கள் தங்கள் பெற்றோருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தியது மனதை நெகிழ வைத்தது. நிகழ்ச்சியில் 1000 அரசு பள்ளி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செஸ் போர்டு வழங்கப்பட்டது.