சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான ரேடியண்ட் பார் கிரிக்கெட் லீக் என்ற உலக தொடர் 2025 கிரிக்கெட் போட்டிகள் டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா ஷாஹீத் விஜய் பதிக் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரும் டிச.8ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கு பெற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் பாலசுந்தர் தேர்வு பெற்றுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலசுந்தர் (30). சிவில் பி.இ. முடித்துள்ளார். மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு பிறந்தது முதல் இடதுகை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி கூலித்தொழிலாளி. காலமாகி விட்டார் இவரது தாய் விஜயா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பாலசுந்தருக்கு கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்பது தீராத தாகம். தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்ட பாலசுந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தனது அசாத்திய திறமையை வெளிகாட்டி உள்ளார். இதற்காக பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். இவரது கிரிக்கெட் பயிற்சிக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
தன் திறமைகளை வளர்த்துக்கொண்ட பாலசுந்தர் கடந்த 2022ம் ஆண்டு காங்கேயத்தில் நடந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி தேர்வில் விளையாடினார். இதில் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து சாதித்தார். இதையடுத்து அந்த போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும் தமிழ்நாடு அணியில் ஏ பி சி என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 54 பந்துகளில் 114 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். தொடர்ந்து புனேவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். இதேபோல் கோயம்புத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு ஏ-பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து சாதித்தார்.
இவ்வாறு பல போட்டிகளில் பங்கேற்று விருது மற்றும் கோப்பைகளை பாலசுந்தர் வென்றுள்ளார். மேலும் ஆக்ராவில் தேசிய அளவில் நடந்த இந்தியா- நேபாள் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாலசுந்தர் தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். கடந்தாண்டு மத்திய பிரதேசம் இந்தூரில் 8 மாநிலங்கள் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் தேர்வு பெற்றார். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான ரேடியண்ட் பார் கிரிக்கெட் லீக் என்ற உலக தொடர் 2025 கிரிக்கெட் போட்டிகள் டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா ஷாஹீத் விஜய் பதிக் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரும் டிச.8ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் மோதுகின்றன.
இதில் லக்சயா XI அணியில் விளையாட தமிழகத்தில் இருந்து பாலசுந்தர் தேர்வு பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.