ஆமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், குஜராத்தை சேர்ந்த 1.11 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தபால் அட்டைகள் எழுதி அனுப்பி உலக சாதனை படைத்துள்ளனர்.
மோடியின் “மேக் இன் இந்தியா”, “சுதேசி இயக்கம்”, “சரக்கு மற்றும் சேவை வரி” சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முயற்சிகளுக்காக மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து நன்றியை வெளிப்படுத்தும் வகையில் பிரதமருக்கு தபால் அட்டைகள் எழுதியுள்ளனர்.

குஜராத் கூட்டுறவு துறையின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த முயற்சி, அக்டோபர் 14 அன்று கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. மாநில அரசு செயலாளர் சந்தீப் குமார் கூறுகையில், “ஒரே தலைவருக்கு இத்தனை பேரால் நன்றி தெரிவிக்கும் வகையில் தபால் அட்டைகள் அனுப்புவது வரலாற்றில் இதுவே முதல் முறை,” என்றார்.
முந்தைய சாதனையை சுவிஸ் மேம்பாட்டு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் (SDC) 6,666 தபால் அட்டைகளுடன் வைத்திருந்தது. குஜராத்தின் 1.11 கோடி அட்டைகள் அந்த சாதனையை முறியடித்து, இந்தியாவை புதிய உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளன.