புது டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா ஏப்ரல் 22 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கியது. பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக 10-ம் தேதி மாலை ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. தற்போது, 19 நாட்கள் பதற்றத்திற்குப் பிறகு, எல்லையில் எந்த மோதலும் இல்லை என்றும், அமைதி திரும்பியுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், “நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. நமது அண்டை நாடுகளைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நமது அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது அவசியம்.

நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால், அதை செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். தற்போது, நமது நாட்டின் 7,000 கிலோமீட்டர் கடல் எல்லையை செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். நமது செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாமல், பல்வேறு சாதனைகளை நாம் அடைந்திருக்க முடியாது” என்று கூறினார்.