இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனிர், மேலும் 10 ஆண்டுகள் அதே பதவியில் தொடரும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ல் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட முனிரின் பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 28ல் முடிவடைகிறது. ஆனால், அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலியுறுத்தி, சிவில் மற்றும் ராணுவத் தலைவர்களின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாக நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

முர்ரியில் நடைபெற்ற ஆலோசனையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவத் தளபதி அசிம் முனிர் மற்றும் ஐ.எஸ்.ஐ. இயக்குநர் அசிம் மாலிக் உள்ளிட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதில் முதலீடுகளை ஈர்க்க, பாதுகாப்பும் அரசியல் நிலைத்தன்மையும் அவசியம் என்பதில் ஒருமிப்பு எட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 5 ஆண்டு நீட்டிப்பு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அமெரிக்கா, சீனா, வளைகுடா நாடுகள் முதலீட்டில் ஆர்வம் காட்டியுள்ள நிலையில், ராணுவச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் முயற்சி பாகிஸ்தான் அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது.