ஜெய்ப்பூர்: துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து தரையிறக்கப்பட்டது. தீவிர விசாரணைக்கு பின், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது போலியானது என உறுதி செய்யப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் IX-196 துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று நள்ளிரவு 12.45 மணியளவில், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ஜெய்ப்பூர் விமான நிலைய காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. விமானிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானம் மதியம் 1.20 மணியளவில் ஜெய்ப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்த 189 பயணிகளும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். இதையடுத்து அந்த விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனையிட்டனர். விமானத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என போலீசார் அறிவித்தனர்.
இதேபோல் புதுடெல்லியில் இருந்து லண்டன் செல்லும் விஸ்தாரா விமானத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் இருக்கும்போதே விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்தது.
உடனடியாக முடிவு செய்யப்பட்டு விமானத்தை பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
தீவிர சோதனைக்கு பின், விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பதும், வெறும் புரளி என்பதும் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, விமானம், இரண்டரை மணி நேரம் தாமதமாக லண்டனை சென்றடைந்தது. விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் 6-வது நாளாக தொடர்கிறது இன்று (சனிக்கிழமை) இரண்டு விமானங்களுக்கு மட்டுமே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.