புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்கான இரண்டாவது விமானம் பிப்ரவரி 15 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்க உள்ளது. முதல் கட்டமாக, அமெரிக்க வெளியுறவுத்துறை 104 பேர் கொண்ட குழுவை இந்தியாவுக்கு நாடு கடத்தியது. அவர்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி அமெரிக்க இராணுவ விமானத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இந்த 104 பேரில் பெரும்பாலோர் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த மக்கள், தாங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகவும், அமெரிக்க விசாக்களைப் பெற ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டதாகவும் கூறினர்.
முறையான விசாக்கள் இல்லாமல் பல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவிற்கு பயணம் செய்த பல கண்ணீர் கதைகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்த சூழ்நிலையில், இரண்டாவது விமானம் நாளை பஞ்சாபில் தரையிறங்க உள்ளது. 487 இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதை மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சீமா, ‘குஜராத் மற்றும் ஹரியானாவில் விமானங்கள் ஏன் தரையிறங்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். ‘பஞ்சாபில் தரையிறங்கும் இந்த விமானம் பாஜகவின் திட்டம், இதன் மூலம் அவர்கள் பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர்.’ ஹரியானா அல்லது குஜராத் மாநிலங்களில் விமானம் ஏன் தரையிறங்கவில்லை என்பது தெளிவாகிறது, ”என்று அவர் கூறினார்.