நாக்பூர்: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக கூட்டணி 230 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடந்த 5-ம் தேதி பதவியேற்றார்.
ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. நாக்பூரில் நடைபெற்ற விழாவில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 39 உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் ஃபட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மூத்த தலைவர்கள் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் 19 புதிய பாஜக உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, மூத்த தலைவர்கள் குலாப்ராவ் பாட்டீல், தாதா புஷ் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஹசன் முஷ்ரிப், தனஞ்சய் முண்டே உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மகாராஷ்டிராவில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் 43 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க முடியும்.
கடந்த 5-ம் தேதி தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதுவரை 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மகாராஷ்டிர அமைச்சரவையில் மொத்தம் 42 பேர் இடம் பெற்றுள்ளனர். புதிய அமைச்சர்களில் 33 பேருக்கு அமைச்சரவை அந்தஸ்தும், 6 பேருக்கு மாநில அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் மற்றும் 4 பெண்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
துணை முதல்வர்கள் மற்றும் புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் பின்னர் அறிவிக்கப்படும். மாநில உள்துறை, முதல்வர் ஃபட்னாவிஸிடம் இருக்கும். கூட்டணி கட்சிகளுக்கு இந்த துறை ஒதுக்கப்படாது. ஷிண்டேவின் சிவசேனாவுக்கு ஊரக வளர்ச்சி, வீட்டுவசதி, தொழில், சுகாதாரம், போக்குவரத்து, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மராத்தி மொழி மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்படும்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நிதி, ஒத்துழைப்பு மற்றும் விளையாட்டுத் துறைகள் ஒதுக்கப்படும் என மகாராஷ்டிர பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், பாஜகவின் புதிய தலைவராக ரவீந்திர சவான் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.