புதுச்சேரி: புதுச்சேரி தேர்தலுக்கு 45 கம்பெனி மத்திய துணை ராணுவம் வருகை புரிந்துள்ளனர்.
புதுவை சீனியர் எஸ்பி கலைவாணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறோம். கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம். 24 மணி நேரமும் செயல்படும் சோதனைச் சாவடிகள் புதுச்சேரியில் 19, காரைக்காலில் 10, ஏனத்தில் 10, மாகி பிராந்தியத்தில் 7 இடங்களில் அமைத்துள்ளோம்.
மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 3 பறக்கும் படைகள் தொகுதி முழுவதும் சுற்றி வருகின்றன. இதைத் தவிர வருமான வரித்துறை உள்ளிட்ட 24 அமலாக்க முகமைகள் வாயிலாகவும் விமான நிலையம், ரெயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து வருகிறோம்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் 3 கிலோ எடையுள்ள ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுவரை ரூ.15 லட்சம் பிடிபட்டுள்ளது. 1500 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1500 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சமூக ஊடகங்களைக் கண்காணிக்க இணையவழி குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் போலீஸ் பிரிவு 4 பிராந்தியங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி தேர்தலுக்காக 45 கம்பெனிகள் மத்திய துணை ராணுவம் வருகிறது. இதில் ஏற்கெனவே 10 கம்பெனி வந்துவிட்டது.
ஒன்றிரண்டு நாள்களில் 20 கம்பெனி வருகிறது. மீதி 15 கம்பெனி ஒருவாரத்தில் வருகிறது. மேலும், இரவு நேரத்தில் போலீஸ் ரோந்தை அதிகப்படுத்தியிருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 550 பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தடுப்புக் காவல் சட்டத்தில் ஏற்கெனவே 5 பேரும் இப்போது 6 பேரும் ஓராண்டுக்குச் சிறையில் அடைத்து இருக்கிறோம்.
ஆயுதம் வைத்திருக்க 177 உரிமம் வழங்கப்பட்டது. இதில் வங்கிகளுக்கு 83 அடக்கம். அவர்களுக்கு விதிவிலக்கு. மற்ற 94 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.