பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மங்களூரு பகுதியை சேர்ந்த மாணவர்கள் 48,000 காயத்ரி மந்திரம் மற்றும் துர்கா சூக்தம் பாராயணம் செய்தனர். இந்த ஜெபம், பாரதிய கல்வி அறக்கட்டளையின் சங்கர ஸ்ரீ வேத பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த ஜெப நிகழ்வின் மூலம் இந்திய ராணுவத்துக்கும் அதன் வீரர்களுக்கும் ஆன்மீக வலிமை சேர்க்கும் முயற்சியாக இது நடத்தப்பட்டது. ரிதம் ஜனத்வானி யூடியூப் சேனலில் இது குறித்து முழுமையான விவரங்கள் பகிரப்பட்டன. தேசிய பாதுகாப்புக்காக மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே நாளில் 24,000 முறை காயத்ரி மந்திரம் ஜெபித்தனர். அதேபோல் மறுநாளும் 24,000 முறை ஜெபித்து மொத்தமாக 48,000 முறை ஜெபிக்கப்பட்டது.
மேலும், 108 முறை துர்கா சூக்தம் பாராயணம் செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்த முயற்சியின் மூலம், நாட்டிற்கு பாதுகாப்பு மற்றும் வீரர்களுக்கு ஆற்றல் கிடைக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். விஸ்வபிரசாத் பட் என்பவர், “நாட்டின் பாதுகாப்பிற்காக நாங்கள் கற்றிருக்கும் மந்திர சக்தியை பயன்படுத்துகிறோம்” என்றார்.பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் தாக்குதலை மேற்கொண்டது.
இதற்கும் மாணவர்களின் ஜெபம் ஆதரவு அளித்தது. இந்த முயற்சிக்கு வேதபாடசாலை குருக்கள் மற்றும் மகா சுவாமிகளும் ஆதரவு தெரிவித்தனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆன்மிக முயற்சி, மாணவர்கள் நாட்டிற்கும் ராணுவத்திற்கும் அன்பும் பற்றும் கொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. அமைதியை விரும்பினாலும், நாட்டை பாதுகாக்கும் கடமையில் எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டியதுதான் என்ற கருத்தும் இதில் அடங்கியுள்ளது.