திருவனந்தபுரம்: கேரளாவில் நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பெறாமல் இருக்கும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 6 மாதங்களுக்கும் மேலாக ரேஷன் பொருட்கள் பெறாத 5,62,494 முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4,40,811 வெள்ளை நிற குடும்ப அட்டைகளும், 1,21,683 நீல நிற குடும்ப அட்டைகளும் அடங்குகின்றன. இந்த அட்டைகளுக்கான ரேஷன் விநியோகம் அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைகள் உண்மையில் பயன்பாட்டில் உள்ளனவா என்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக கூறப்படுகிறது.
நிரந்தர ரத்து இல்லை
ரேஷன் விநியோகம் தற்காலிகமாக முடக்கப்பட்டாலும், குடும்ப அட்டை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று அர்த்தமில்லை. மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் 3 மாதங்களுக்குள் e-KYC நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். மேலும், குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பினரின் மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை ரேஷன் பதிவுகளில் புதுப்பிக்க வேண்டும். நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்பங்கள், தங்களது குடும்ப அட்டை நிலை மற்றும் e-KYC விவரங்களை சரிபார்த்துக் கொள்வது அவசியமாகிறது.
இந்த நடவடிக்கை மூலம் பயன்பாட்டில் இல்லாத அல்லது நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத குடும்ப அட்டைகளை அடையாளம் காண முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
