மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 65.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இப்போது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான, சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவுக்குப் பிறகு, மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான கணிப்புகள் கூறியுள்ளன. அதே சமயம் மகா விகாஸ் கூட்டணி கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1995 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.
மாநிலத்தில் உள்ள 36 மாவட்டங்களில், கோலாப்பூரில் 76.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2019 சட்டமன்றத் தேர்தலில் 61.4 சதவீத வாக்குப்பதிவையும், 2024 மக்களவைத் தேர்தலில் 61.39 சதவீத வாக்குப்பதிவையும் விட அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், “சட்டசபை தேர்தலுக்கு மக்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்” என்றார்.