ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட சட்டசபை தேர்தலில் 43 தொகுதிகளில் மொத்தம் 685 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், ஜாம்ஷெட்பூர் மேற்கு சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக 28 வேட்பாளர்களும், ஜெகநாத்பூர் தொகுதியில் குறைந்தபட்சம் 8 வேட்பாளர்களும் உள்ளனர்.
ஜார்க்கண்டில் 2-ம் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. 81 தொகுதிகளை உள்ளடக்கிய ஜார்க்கண்ட் தேர்தல் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தலில் 43 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 18ம் தேதி தொடங்கியது. இதற்கான நடவடிக்கைகள் அக்டோபர் 25ம் தேதியுடன் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மொத்தம் 805 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின் 743 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று 58 பேர் வாபஸ் பெற்றனர். இதையடுத்து 43 தொகுதிகளில் நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 685 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
2019 சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதிகளில் மொத்தம் 633 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 38 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 634 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், இதுவரை ரூ.121.14 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இம்முறை ஜார்க்கண்ட் தேர்தலில் அதிகாரிகள் பெரும் பறிமுதல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சதி திட்டம் தீட்டிய 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.