பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 11ம் தேதி டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூலை 31ம் தேதிக்குள் 1 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்.பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11,500 கனஅடி நீர் வருவதை உறுதி செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
இது குறித்து முடிவெடுப்பதற்காக முதல்வர் சித்தராமையா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். நேற்று மாலை நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவில் முதல்வர் பேசுகையில், ”கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் இந்த ஆண்டு 28 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் 63 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன. ஆனால், காவிரி ஆணையத்தின் பரிந்துரையை நிராகரிக்க முடியாது. தினமும் வினாடிக்கு 11,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்ட நிலையில், 8,000 கன அடி தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.
இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 22,000 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2,250 கன அடியும் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.