மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத் போன்ற சம்பவங்கள் இங்கு நடைபெறுகின்றன, அவை தடுக்கப்பட வேண்டும். அதற்காக மகாராஷ்டிராவில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத் போன்ற செயல்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- கட்டாய மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத் தடுக்க 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது. இதில் டிஜிபி தவிர, உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், சிறுபான்மையினர் மேம்பாடு, சட்டம் மற்றும் நீதி, சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 பேர் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்தக் குழு மகாராஷ்டிராவின் தற்போதைய நிலைமையை ஆராயும். லவ் ஜிகாத், கட்டாய மதமாற்றம் குறித்த புகார்களை கையாளும் முறை, இது தொடர்பாக பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்கள், புதிய சட்டத்திற்கான விதிமுறைகள், புதிய சட்டத்தின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு அரசிடம் அளிக்கப்படும். இவ்வாறு அரசு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சமாஜ்வாடி எம்எல்ஏ ராய்ஸ் ஷேக் கூறுகையில். “மகாராஷ்டிர அரசிடம் லவ் ஜிகாத் பற்றிய புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. ஆனால் கட்டாய மதமாற்றம், ஜிகாத் என்று அரசியல் செய்து வருகிறது. லவ் ஜிகாத் தொடர்பாக மகாராஷ்டிரா காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை,” என்றார்.