பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த ஷரத் என்ற சமூக வலைதளப் பயனாளர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு யாசகர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பெங்களூரு ஜெயநகர் சாலையில் பதிவான வீடியோவில் பேசிய நடுத்தர வயது நபர், “ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட்டில் 2013-ம் ஆண்டு என்ஜினீயராக பணிபுரிந்தேன். அங்கேயே எம்எஸ் முடித்தேன். பிறகு குளோபல் வில்லேஜில் உள்ள மைண்ட் ட்ரீயில் பணிபுரிந்தேன்.
நல்ல சம்பளத்துடன் பெங்களூரு திரும்பி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தேன். நான் அந்த நேரத்தில் ஒரு பெண்ணை காதலித்தேன், ஆனால் ஒரு மோசமான சம்பவத்தால், எல்லாவற்றையும் இழந்தேன். நான் என் வேலையை இழந்தேன், என் காதலும் விவாகரத்தில் முடிந்தது. திடீரென்று, நான் என் பெற்றோரை இழந்தேன், அதனால் நான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். இப்போது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகிறேன்” என்று விரக்தியுடன் கூறினார்.
இந்த வீடியோவில் அவர் தனது வாழ்க்கையை ஆங்கிலத்தில் விவரித்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.