சண்டிகரில், பஞ்சாப மாநில அரசு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வசம் இருந்த வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தது. முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பஞ்சாபில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து, இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருவதால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த வாரம், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நான்கு பேரை கைது செய்து, 5 கிலோவுக்கும் அதிகமான ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சோனு மற்றும் ராகுல் ஹன்ஸ் என்பவர்களுக்கு சொந்தமான சொகுசு வீடுகளை பஞ்சாப் போலீசார் புல்டோசர் கொண்டு இடித்தனர். கடந்த மூன்றாண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த சோனுவின் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பங்களா, நேற்று முன்தினம் இரவு இடிக்கப்பட்டது. இதேபோல், லூதியானாவில் உள்ள ராகுல் ஹன்ஸின் வீட்டையும் போலீசார் இடித்தனர்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துகளை புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கையை உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் பாஜக அரசு முன்னதாகவே மேற்கொண்டது. ஆனால், அதே நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி விமர்சித்திருந்தது. தற்போது, பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க அதே அதிரடியை ஆம் ஆத்மி அரசு மேற்கொள்வதாகி உள்ளது.