புதுடில்லி: ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் நீரவ் மோடி உறவினரை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் மெகுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்.
அவர் மூலம் மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அவருக்கு பெல்ஜியத்தின் எப் ரெசிடென்சி கார்டு விசா வழங்கப்பட்டு உள்ளது. குடியுரிமை பெறுவதற்காக மெகுல் சோக்சி இந்தியா, ஆண்டிகுவா குடியுரிமைகளை மறைத்து போலி தகவல்களை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருவதாக தெரிகிறது. மெகுல் சோக்சி பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும். இதையடுத்து அவரை நாடு கடத்த பெல்ஜியத்தில் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.