மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டுமா என்ற விவகாரத்தில் கடந்த 10 நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்காமல் வைத்திருப்பதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், “மசோதாக்கள் மீது ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்” என்று ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைமை நீதிபதிக்கு 14 கேள்விகள் அடங்கிய கடிதம் எழுதியிருந்தார். அதை வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணையை மாற்றி அனுப்பினார். இதில் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் இடம்பெற்றனர்.
அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு, மத்திய-மாநில அரசுகள், ஜனாதிபதி மற்றும் கவர்னர்களின் அதிகார வரம்பு, நீதிமன்ற தலையீடு ஆகியவற்றை நேரடியாக தொடும் முக்கிய அரசியல் சாசன விவகாரமாக கருதப்படுகிறது.