ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஹரியானாவில் 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடந்தது.
அக்டோபர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 37 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளம் 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணித்துள்ளது. இதையடுத்து ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று காங்கிரஸ் கூறியது.
தோல்விக்கான காரணங்கள், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் காங்கிரஸின் நிலைமை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் முக்கியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.