புதுடில்லி: ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி இன்று இந்தியா வந்துள்ளார். தலிபான் ஆட்சி தொடங்கியதிலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் முதல் ஆப்கான் அமைச்சர் இவராவார். டில்லியில் அவர் வந்தபோது மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அக்.16 வரை அவர் இந்தியாவில் தங்கி அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை பிடித்த பின், பெரும்பாலான நாடுகள் அந்த ஆட்சியை அங்கீகரிக்கவில்லை. ரஷ்யா மட்டும் தலிபான் ஆட்சியுடன் தொடர்பை வைத்திருந்தது. இதனால், தலிபான் அரசின் பிரதிநிதிகள் வெளிநாடு செல்ல ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடையிட்டிருந்தது. ஆனால் இந்திய அரசு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் முட்டாகியின் வருகைக்கு அனுமதி கோரியிருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சிறப்பு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, அமிர்கான் முட்டாகி டில்லியில் வந்தடைந்தார். அவரை வரவேற்ற வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியா–ஆப்கான் உறவுகள் மற்றும் பிராந்திய அமைதி குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்த ஆவலாக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. தலிபான் ஆட்சி மீதான சர்வதேச எதிர்ப்புகளுக்கு மத்தியில், முட்டாகியின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கக்கூடும் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.